Monday, September 24, 2012

நட்பு

கற்கண்டாய்க் காவியமாய்க் 
கண் பேசும் காதலும் தோற்கும்
நட்பிற்கும் உண்டோ
நேரம் காலம் தூரம்?

எண்ணிலடங்கா வைகறைகள்
இனிதாய்க் கழிந்தபின்பும் 
கனிந்த நட்புக்கு
காலம் காலனாகுமா?
தொடர்பின்றி போனால்
தொலைந்தும் போகுமா?

இதயமறிந்த நட்பு
இடைவெளி அறியாது.
அட்டவணை வாழ்வில்
நட்புக்கு நேரமில்லை.
என்மனதில் நீயோ
என்றும் நீங்கா ஓவியமாய்..
அன்றலர்ந்த மலராய்...
என்றென்றும் அழகாய்...
பார்த்த முதல் நொடி
நெஞ்சில் நீங்கா நினைவாய்...
அவ்வப்பொழுது
தட்டிக் கேட்கும்
நடுநிலை மனசாட்சியாய்...
நினைவலைகளில் ஒன்றாய்...
ஊடகம் ஏதுமின்றி 
உயிரின் வலி அறிந்து
பௌதிக விதிகட்குச் சவாலாய்...
உன் மனதில் நானும்
உயிர் மறவா இன்னிசையாய்...

வார்த்தைகள் சொல்லும்
விவரங்கள் அறிய
அவையினர் போதும்
அதிசயம் இதிலென்ன?
சொல்லாத வார்த்தையின்
சொற்சுவை பொருட்சுவையறிய
கேட்காத கேள்விக்கும்
கணப்பொழுதில் பதிலறிய 
மௌனமொழியே பல்லவியாய்
மெட்டமைத்துத் தாளமிட
அலைவரிசை மாறாமல்
அவ்வப்போது பேசிக்கொள்ள
விதி எழுதும் 
வாழ்க்கை தரும்
விடையேதுமில்லாத 
விழியோர அழுகைக்கு
வார்த்தை எதுவுமின்றி
விழியாலே ஆறுதல் சொல்ல
வானுயர் நண்ப! உனையன்றி
வையகத்தில் வேறெவருமுண்டோ?

Wednesday, September 19, 2012

விநாயகனே போற்றி ! போற்றி !

அன்னை தந்தையை
அகிலம் என்றவன் போற்றி !
ஆனை முகத்தவன்
ஆனந்தவடிவே போற்றி !
இடர்தரும் இன்னல்கள்
இமைப்பொழுதில் போக்குவாய் போற்றி !
ஈகைக் குணத்தவன் போற்றி !
உற்றது என்றும் காக்கும்
ஊழிமுதல்வன் போற்றி !
எங்கும் நிறைந்தவன் போற்றி !
ஏதும் அளிப்பவன் போற்றி !
ஐங்கரச் செல்வன் போற்றி !
ஒப்பில்லாதவன் போற்றி !  
ஓதுமறை இறைவன் போற்றி !
ஔவையின் நாயகன்  போற்றி !
கருணைக் கடலே போற்றி !
கணபதி உன்தாளே போற்றி !
பாரத பாச்சுரங்கள்
சுவடியில் சித்தரித்தாய் போற்றி !
மானுட குலம் காத்து
மண்ணுலகுக்கின்பம் தா போற்றி !