Wednesday, June 27, 2012

மாயாவி மனம்



மனம் ஒரு மாயாவி.
விரும்புவது காட்டும் 
மாயக் கண்ணாடி.
கேட்குமிடம் இட்டுச் செல்லும்
மாயக் குதிரை...

விருப்பங்களை வித்தாக்கி
எண்ணங்களை எருவாக்கிக்
கனவுகளைப் பயிராக்கும்
மாய நிலம்.

கடிவாளமிட்டால் சீராய் ஓடும்.
கடிவாளமதைத்
தொலைத்து விட்டால்...
நமை ஏய்த்து விட்டு
தறி கேட்டு ஓடியாடி 
அர்த்தமற்ற ஆசைவலையில்
சிக்கவைத்து
இழுத்தும் செல்லும்.

உறுதியாயிரு!
அறுதியிடு! வேலியிடு!
உழுது உழுது களையெடு!
மூச்சு நிற்கும் காலம் வரை!

எழுதிய நாள்: ௦௧-௧௫-௨௦௧௧

Saturday, June 16, 2012

தந்தையர் தின வாழ்த்துக்கள்...


மாதா, பிதா குரு, தெய்வம்
-முறை அறியாதவர்க்கும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- மொழி தெரியாதவர்க்கும்

தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
- இவ்வறிவு உணராதவர்க்கும்
அன்னையர் தந்தையர் தினங்கள் தேவைதானே!!!

அன்னையாய், ஆசானாய், ஈசனுமான
எந்தன் தந்தைக்கு சமர்ப்பணம்.

நத்தையின் கூடாய்
வெளியுலக ஜன்னலாய்
எழுத்தறிவிக்கும் இறைவனாய்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தந்தையாய்....

சிறுகை அளாவிய
கூழமிழ்துண்டு களிக்கும்,
தம்மின் தம்மக்கள்
அறிவுடைமை போற்றும்
அனைத்து தந்தையர்க்கும் வாழ்த்துக்கள்!!!

Friday, June 8, 2012

என் தேவதை

இவள் உன் மறுபாதி
உனக்குச் சம்மதமா?
அழகாய்த் தான் 
இருந்தாய் நீ!
திருத்திய புடவையில் 
ஆரவாரமில்லா புன்சிரிப்புடன் 
சிலிர்த்தேன் - சரியென்றேன்
என்ன தவம் செய்தேனோ
உன்னை நான் அடைய!

எந்தன் மௌனமும்
உனக்குப் புரிந்த
மொழியானது எப்போது?
என் வலிக்கு
உன் கண்களில் அருவி...
வலிநரம்பின் அறிவிப்புகள்
தடம் புரண்டது எப்போது?

உன்பார்வையில் 
நான் கவியாகவில்லை
உன்பாத கொலுசுகள் 
நான்தாங்க நினைக்கவுமில்லை
எழுந்து உழுது உண்டு
உறங்கி எழுந்ததாய்த் தான் ஞாபகம்
என் ஊனில் உயிரில் 
நீ கலந்ததும் எப்போது?

நீயின்றி நானிந்த பூமியில்
அர்த்தமற்ற அனாதை
நானறியாமலே நீ என்தேவதை
ஆனதும் எப்போது?

வெள்ளி நரைகள்
தளர்ந்த நடைகள்
ஓய்வுக்கு எங்கும்
உன் கண்கள்....

ஏசும் பிள்ளைகள்
நமைப் பாரமென்றதும்...
காரக்குழம்பில் அரளிவாசம்
கவரிமான் வம்சம் நீ
உன் கடைசிப் பயணத்திற்கும்
எனைத் துணைக்கழைத்தாயே!
என்ன தவம் செய்தேனோ
உன்னை நான் அடைய!

ஒன்றாய் வாழ்ந்தோம் பூமியில்
ஒன்றாய் ஏகுவோம் 
சொர்க்கமோ நரகமோ
நாயாய், நரியாய், நரனாய்...
இனியொரு ஈனப்பிறவி
உண்டெனில்
உன்கரம் பற்ற ,
உன்னுடன் வாழ
என் புண்ணியக்கணக்கு உதவுமா?

எழுதிய நாள்: ௧௦-௨௪-௨௦௧௧

Tuesday, June 5, 2012

புத்தகக் களஞ்சியம்


http://projectmadurai.org/pmworks.html

புத்தகக் களஞ்சியம்

பசிக்குப் புசிக்க புறநானூறு
தொட்டுக்கொள்ள தொல்காப்பியம்
பாயசமாய் பாரதி கவிதைகள்
தேனூறும் திருக்குறள்
கற்கண்டாய்க் கம்பன்
வேறென்ன வேண்டும் வாழ்வில்?

நவரத்தினமாய் நன்னூல்
அணிகலனாய் ஆத்திச்சூடி
பொக்கிஷமாய் பொன்னியின் செல்வன்
இதயத்தில் சிறை வைக்க
இளங்கோவின் சிலப்பதிகாரம்
வைடூரியமாய் வைரமுத்துக் கவிதை
தாலாட்டும் தமிழ்
வேறென்ன வேண்டும் வாழ்வில்?

நவமணிகள் இரத்தினங்கள்
வேண்டாம் வேண்டாம்
திகட்டாத தீந்தமிழ்க்களஞ்சியம்
நித்தம் நித்தம் வேண்டும்
கண்குளிர புத்தகப் பட்டியல்
பார்த்தாலே பரவசம்
வேறென்ன வேண்டும் வாழ்வில்?






Saturday, June 2, 2012

தலைவலிகள்...




(கருத்து: ஷ்ரேயா & பிரியா, எழுத்தாக்கம்: பிரியா)

ரூல்ஸ், ரூல்ஸ், ரூல்ஸ்....
காலையில் எழுந்திடு
முத்துப்பல் துலக்கிடு
குளிக்கும்போதே முகம் கழுவிடு
சுலோகம் இரண்டு சொல்லிடு
காலை உணவு சாப்பிடு
பள்ளிக்கூடம் சென்றிடு
மாணவர்க்கு பயந்திடு
ஆசிரியர்சொல் கேட்டிடு
வகுப்பறையில் அமர்ந்திடு ( தூங்கிடு)
பாடமதை கவனித்திடு
மதிய உணவு சாப்பிடு
சாலைநெரிசலில் சிக்கிடு
தலைவலி என..
தலைவிதி இதென அறிந்திடு
வீட்டுக்கு வந்திடு
பூனையைக் கொஞ்சம் கொஞ்சிடு
பாலாம் அதனை மருந்தென
மூக்கைப் பிடித்துக் குடித்திடு
பள்ளிப்பாடம் படித்திடு
வீட்டுப்பாடம் முடித்திடு
வயிற்றுக்குணவு ஈந்திடு
தூக்கம்வரும் தூங்கிடு
அதிகாலை அலாரமாய் 
அன்னையவள் குரலொலி
மீண்டும் ஒருதினம் ஆரம்பம்

நடுவில் கொஞ்சம்...

skating, skiing, biking
piano playing, painting
violin, volleyball
chess, carrom..
பல்லாங்குழி,தாயம்...
ஐயோ மீண்டும் தமிழ்ப்பாடம், 
கர்னாடக சங்கீதம்
இடையில் கொஞ்சம் சமஸ்க்ருதம்

ஆறேழு வருடமாய்
என் வாழ்க்கைக் கதையிது
இன்னும் ஆறு வருடங்கள்
இனிதாம் பள்ளிவாழ்க்கையாம்
அடுத்த வருடம் பார்க்கலாம்
இதே கதைதான் தொடருமா?


பன்னிரு வருடமாம்
பள்ளிச்சிறை வாழ்க்கை
பிள்ளையாம் பருவத்தை
பள்ளிதனில் தொலைத்திட்டு
வளர்ந்தபின் வாலிபத்தை
வேலைதனில் தொலைத்திட்டு
பிறகு.....பிறகு????
ஐயோ மீண்டும் ஒரு சுழற்சி
என்பெற்றோராய் நான்
என்னைப்போல் என் பிள்ளை
என்ன வாழ்க்கையிது???

ஈராயிரமாண்டுக்குப் பின்
எஞ்சுவது என் எலும்புமில்லை
எதற்கிந்த ஓட்டம்?
ஏனிந்த ஆட்டம்?
நடப்பது நடக்கட்டும்.

ரயில் பயணமாய்
வாழ்க்கைப் பயணம்
முதலிலிருந்து முடிவுவரை
உன்னை ஈன்றவர் 
இறுதிவரை வருவதில்லை
நீ ஈன்றவர் உன்னோடு
வரப்போவதுமில்லை.
இடையில் வந்தவர்
இடையில் போவார்.
அறியா மூடராய்
அறுதியிட்டுச் சொல்லலாம் 
இறுதிவரை வருவேன் என்று...
நடந்தது எல்லாம் நன்றாய் நடந்தது
நடக்கப்போவதும் நன்றாய் நடக்கும்
கண்ணன் சொன்ன கீதையிது
அர்ச்சுனனாய் அறிந்திட ஆசையேது???