Friday, June 8, 2012

என் தேவதை

இவள் உன் மறுபாதி
உனக்குச் சம்மதமா?
அழகாய்த் தான் 
இருந்தாய் நீ!
திருத்திய புடவையில் 
ஆரவாரமில்லா புன்சிரிப்புடன் 
சிலிர்த்தேன் - சரியென்றேன்
என்ன தவம் செய்தேனோ
உன்னை நான் அடைய!

எந்தன் மௌனமும்
உனக்குப் புரிந்த
மொழியானது எப்போது?
என் வலிக்கு
உன் கண்களில் அருவி...
வலிநரம்பின் அறிவிப்புகள்
தடம் புரண்டது எப்போது?

உன்பார்வையில் 
நான் கவியாகவில்லை
உன்பாத கொலுசுகள் 
நான்தாங்க நினைக்கவுமில்லை
எழுந்து உழுது உண்டு
உறங்கி எழுந்ததாய்த் தான் ஞாபகம்
என் ஊனில் உயிரில் 
நீ கலந்ததும் எப்போது?

நீயின்றி நானிந்த பூமியில்
அர்த்தமற்ற அனாதை
நானறியாமலே நீ என்தேவதை
ஆனதும் எப்போது?

வெள்ளி நரைகள்
தளர்ந்த நடைகள்
ஓய்வுக்கு எங்கும்
உன் கண்கள்....

ஏசும் பிள்ளைகள்
நமைப் பாரமென்றதும்...
காரக்குழம்பில் அரளிவாசம்
கவரிமான் வம்சம் நீ
உன் கடைசிப் பயணத்திற்கும்
எனைத் துணைக்கழைத்தாயே!
என்ன தவம் செய்தேனோ
உன்னை நான் அடைய!

ஒன்றாய் வாழ்ந்தோம் பூமியில்
ஒன்றாய் ஏகுவோம் 
சொர்க்கமோ நரகமோ
நாயாய், நரியாய், நரனாய்...
இனியொரு ஈனப்பிறவி
உண்டெனில்
உன்கரம் பற்ற ,
உன்னுடன் வாழ
என் புண்ணியக்கணக்கு உதவுமா?

எழுதிய நாள்: ௧௦-௨௪-௨௦௧௧

No comments:

Post a Comment