Friday, July 13, 2012

இழப்பா ? வரமா ?


அழகின் திமிரில் திளைத்தாய்.
எலுமிச்சை நிறமாம் பறைசாற்றினாய்.
அப்போதுதானே பார்த்தேன் உந்தன்
இதயத்தின் இருட்டுப்பகுதியை..

கண்டதும் காதலாம்.
பாழும் மனம் உந்தன்
கருணைச்செயலில் கரைந்துருகியது.
இனிய மனம் என்றெண்ணி
இளகிய குணம் கண்டவுடன்
காதல் கொண்டேன்.

என்தோலின் நிறம்
காக்கை வண்ணம்.
நீ சொல்லி நான் அறிந்தேன்.
எந்தன் ஓட்டுவீட்டின்
ஓட்டைக்கூரையில்
தேளும் கரப்பானும்...
நீ சொன்ன பிறகும்
நான் பார்த்ததில்லை.

திண்ணை முற்றமும்
பால்நிலா வெளிச்சமும்
நிலாச்சோறு சாப்பிட
வா வா என்றழைக்கும்.
நீயோ கவிதை வழியும் கனவில்
கல்லைக் கரைத்து ஊற்றினாயே?

தலைசாய தோள்கொடுத்தால்
போதும் என்று நினைத்தேன்
காகிதப்பணம் அன்றித் தேவை
வேறில்லை என்றாய்
தகரம் உந்தன் மனமா?

என்வீட்டுப் பொருளாதார நெருக்கடி
என் அன்புமரத்தில் விழுந்த பேரிடி

அப்படியென்ன கேட்டு விட்டேன்?
இறுதிவரை என்னுடன் வா என்றேன்
என்னில் சரி பாதியாகிட
சரியா என்றேன்.
இரவில் உன் மடியில் தூங்கிட
அதிகாலைக்கனவில் நீ வந்திட
காலை மாலையுன் முகத்தில் விழித்திட
சம்மதமா? எனக்கேட்டேன்.
அன்பன்றி அருகதைக்கு
அளவுகோலும் வேறுண்டோ?

வேண்டாம் என்றாயே!
இரும்பைக் காய்ச்சி
இதயத்தில் ஊற்றிவிட்டு
உன்வழிச் சென்றாயே!
இலக்கை அடைந்தாயா?
உன்கனவை நனவாய்க் கண்டாயா?

என்கைக்குள் உன்னை ஒளித்திட
என்னால் முடியவில்லை
என்மனதின் மொழி சொல்ல
தமிழின் வார்த்தையும்
போதவில்லை போதவில்லை.

எங்கோ இருக்கும்
வெண்ணிலவை ரசிக்கும்
உன் கண்களுக்கு
என் இதயத்தின்
நுழைவாயில்கூட
புரிபடவில்லையா?

எனை அடைந்திடும்
அருகதை உனக்கில்லை
என அன்றறியவில்லை.
என்னில் என்ன குறை எனத்
தேடிக் களைத்தேன்.
கருமையும் ஏழ்மையும்
குறையா? குறையா? 
நல்ல வேளை!
விழித்து விட்டேன்...
எட்டாக்கனி இது புளிக்கும்
என ஒதுங்கிவிட்டேன்

பார்வை தவறியதேயன்றி
பாதை தவறவில்லை.
இதயத்தின் ஈரம்
சருகாய் உலர்ந்ததும்
நினைவினின்று நீயும்
மருவாய் உதிர்ந்தாய்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
நன்றே! நன்றே!
என் இதயமும் கல்தான்
உன் இழப்பால் நொறுங்காத கல்.
விரும்பும் முகம் காட்டும்,
அன்பைப் பிரதிபலிக்கும்
கண்ணாடிக்கல்.

காலம் ஆற்றியது
உன்னால் விழுந்த
மனதின் கீறல்களை.
உன்னால் திருப்பித் தர முடியுமா?
உன்னில் நான் தொலைந்து
தொலைத்துவிட்ட என் வாழ்வின்
மணித்துகள்களை???



2 comments: