Wednesday, May 30, 2012

அய்யோ சீர்திருத்தமா??



ஆறேழு பரம்பரையா
வெளங்கலையே எங்க வயிறு
லட்சுமி கடாட்சமெல்லாம்
காளை ஈனும் மாட்டுக்கில்ல
தரித்திரம் பிடிச்ச பெண்டுக
பொண்ணாத்தான் பெத்தாக
நா செஞ்ச புண்ணியந்தான்
புள்ளையாய் என் வயித்தில
என்ன தவம் செஞ்சேனோ 
மவராசன் இவன் பொறந்தான்.

பொரிவெளங்கா மண்டையில
படிப்பொன்னும் ஏறவில்ல 
கைகாலு நல்லாருக்கு
ஒடம்பேனோ வளையவில்ல
எம்ஜிஆரு கலரு சூரியா நகலு
ரஜனியோட ஸ்டைலு 
மவராசன் எம்புள்ள
சிங்கக்குட்டிக்கு வரவுவக்க
சீர்செனத்தி தங்கம்
கேக்கலாமின்னு நாபாத்தா
சீர்திருத்த கவிதையின்னு 
மண்ண வாரி தூத்துரீரே!

கவித வேற நல்லா இருக்கு
காலமிது கலி காலம்
கேப்பார் பேச்ச கேட்டு
பெண்வீட்டார் ஆடிவிட்டா 
எம்புள்ள பொழப்புக்கு
ஏழையி நா எங்க போவேன்?

நயமாத்தான் நெல்லுமணி எம்
மூக்கில் வக்க நாதியில்ல
அஞ்சும் பொண்ணா பெத்து
ஆவி அடங்கரவரை
பஞ்சா பறந்த எங்கப்பா
பஞ்சாத்தான் போனாரே
காட்டுக்கு போறவரை
கடன்பாக்கி தீக்கலையே
நா வாக்கப்பட பட்டகடன்
என்கண்ணுமுன்ன நிக்குதுங்க

ஆனைக்கொரு காலம்போல
பூனை எனக்கு காலமிது
ஆச ஆசயா எனக்குன்னு
அரைப்பவுனு கணக்கு வச்சு
எம்புள்ள கரையேற 
நாலு காசு நாலு பவுனு
கேக்கலாமுன்னு நா பாத்தா
சீர்திருத்த கவிதையின்னு
மண்ண வாரி தூத்துரீரே!

காடு மரஞ்செடி கொடிக்கு
காசுபணம் தேவ இல்லீங்க
மனுசப் பொழப்புக்கு
பணந்தாங்க எல்லாமே
இருக்கப்பட்ட தெரியாது- எல்லாம்
இருந்துவிட்டா புரியாது
இல்லாதவன்கிட்ட கேட்டா
பண அருமை தெரியுமுங்க
மாமியாரா கெத்தா நின்னு
மருமவ மேல கொஞ்சம்
ஆச்சி செலுத்த நா நெனச்சா 
சீர்திருத்த கவிதையின்னு
மண்ண வாரி தூத்துரீரே!




Sunday, May 27, 2012

தாயாய் ஒரு சேய்



இவள் சொல்ல வந்தது
  அவனறியவில்லை
அவன் சொல்ல நினைத்தது
    இவளுணரவில்லை
இதயத்தின் சொற்களை
மொழிபெயர்க்க எவருமில்லை
வயதில்லை, விவேகமில்லை
  கண்களில் வழிவது
      காதலும் இல்லை.
எடுத்துரைக்க ஆளில்லை.

இயற்கை அளித்த 
   வளர்ச்சிப் பிரசாதம்
இளங்கன்னி இவளின்
    வயிறு நிறையக் காரணம்.

பிஞ்சிலே முதிர்ந்தாள்
    இளமையதைத் தொலைத்தாள்
கன்றீன்ற கன்றாய்
    இன்று இவளும் ஒரு தாய்!!!



    

Tuesday, May 22, 2012

மேகங்கள்


வேடதாரிகள்.
பெருங்குடைகள்..
நீர்தாங்கிக் குடங்கள்...
மழைநாவால் பூமியை
ஸ்பரிசிப்பவர்கள்....

விந்திய மலையை முத்தமிட்டு பின்
குமரிக்கடலில் முகம் பார்ப்பவர்கள்..
காற்றால் கடத்தப்பட்டாலும்
மூள்வதற்கு சளைக்காதவர்கள்...
சிப்பிக்குள் வீழினும்
கடலில் சென்று சேரினும் 
பணி செய்து கிடப்பவர்கள்....





Sunday, May 20, 2012

தொலைத்தது எதை?



தட்டும் கைகளைத் தேடித் தேடி
கவனம் சிதறிய கண்கள்..
பாராட்டும் நாவைத் தேடி
கேட்க மறந்த செவிகள்..
பட்டம் வாங்கக் காத்திருந்து 
மரத்துப் போன கால்கள்..
வாங்க மட்டும் வாகாய் வைத்து
கொடுக்க மறந்த கைகள்..
புளித்துப் போன சொல்லைத்தவிர
மற்றவை மறந்தது நாவும்..
இலக்கு என்றே குறியாய் இருந்து
வாழ மறந்த உயிர்கள்...

வேண்டியது வேறில்லை என வாழப் பழகிடு
இதுவே போதும் உயிர்க்கு - திருப்தி பழகிடு
எல்லாப் புகழும் இறைவனுக்கே - பக்தி பழகிடு

இயலாமை என்பது மனதில் தான்-முயற்சி பழகிடு
இல்லை என்பது இங்கில்லை - தேடல் பழகிடு
செல்வச்செருக்கு அர்த்தமற்றது - தானம் பழகிடு
ஆடம்பரம் யாருக்காக - எளிமை பழகிடு

அறியாமை நிரந்திரமல்ல - அறிவுப்பசி பழகிடு
கற்றது கைமண்ணளவு - பணிவு பழகிடு
கல்லாதது உலகளவு - கல்வி பழகிடு
கிளியும் கற்பிக்கக்கூடும் - கேள்வி பழகிடு

மொழியின் அழகு இன்சொல்லில் - இனிமை பழகிடு
சும்மா இருப்பதும் சுகம் - மௌனம் பழகிடு
நான், யான், எனது, எனக்கு - அகந்தை மறந்திடு 
வாழும் உயிர்க்கு என்றும் நன்மை பழகிடு

எழுதிய நாள்: ௦௧/௦௩/௨௦௧௦

Wednesday, May 16, 2012

சரசர அவசர வாழ்க்கை

ஒரு மழைநாளின் அந்திப்பொழுதில்,
அலுவலகத்தினின்று வீடு திரும்பும்பொழுது,
ஆஸ்டின் சாலைநெரிசலில்
இரண்டு மணிநேரம்
சிக்கிய போது எழுதியது....


பாதை எங்கும் 
புதிதாய்க் குளித்த 
பழைய மரங்கள்

மழையில் முகம் கழுவி
மேகத்தால் துடைத்துக்கொண்டு
சூரியனைத் தொலைத்துவிட்டு
பொட்டிட்டுக்கொள்ள
வானம் நிலவைத்
தேடும் நேரம்...

மழையாய்க் கரைந்த மேகம்
மறு பிறவி எடுக்கக்
காத்திருக்கும் நேரம்...

வானம் போர்த்திய 
ஓட்டைச் சால்வையினூடே
சிமிட்டும் மின்மினிக்கண்கள்...
காற்றும் ஓய்ந்து போய்
சற்று ஓய்வெடுக்கும் நேரம்...

இரவின் வருகைக்கு
இயற்கையின் ஒத்திகை...

மனிதன் மட்டும்
மனிதன் மட்டுமே...

சாலைகளடைக்கும் வாகனங்களில் 
நிலத்தடி ஊர்திகளில்
கடல் மிதவைகளில்
விமானப் பறவைகளில்
வான் அளாவும்  
கட்டடச் சிறைகளில்...

கடிகார முட்களின் ஆயுட்கைதியாய்
அட்டவணைப் பித்தனாய்
வட்டரங்குக் குரங்காய்...

விடுதலையில்லை
வேட்கையுமில்லை
அண்டமா பிரபஞ்சத்தில்
தானொரு புள்ளி
தானென்ற தெளிவுமில்லை

விதிச்சுழலின் பிடியில்
மணிப்பொறியின் வளையில்
வாழ்விட்டுச் செல்லும் பாதையில்...

 

Sunday, May 13, 2012

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

அம்மா 

கதகதப்பாய் உன் திருவயிற்றினுள்
துள்ளும் இசையாய் உன் இதயத்துடிப்பு
எங்கிருந்தோ உன் குரலொலி 
என்னிடம் நீ பேசும்போது
எனக்குள்ளே ஒரு சிலிர்ப்பு
உன்முகம் காண அடங்காத ஆவல்
தயக்கமின்றி வெளி வந்தேன்
அன்பாய் மலர்ந்த உன்முகமலர்
உனைப் பார்க்கும் போது 
எனக்குள்ளே ஓர் அமைதி
உன்மொழி எனக்கொரு இன்னிசை
என்குரல் கேட்டு நீயும் கிறங்குகிறாய்
என்முகம் பார்த்து நீயும் உன்னை மறக்கிறாய் 
நீயும் நானும் ஓருயிர் தானே!
வெவ்வேறாய் ஆனது எப்போது?


Thursday, May 10, 2012

நந்தவனம்

பாக்களைப் பூக்களாய்ச்
சொரியும் தமிழ் வனமிது 
தமிழனுக்கு ஆட்டக்களம் 
ஆடுகளமன்று

ஆங்க்ளிஷ், தம்லிஷ், இங்கிலம், தமிலம்

தமிலம், இங்கிலம், தங்கிலம் 
இவற்றில் இல்லையாம் இங்கிதம்  
ஆங்கிலமிழ், இங்கிலமிழ் - இவைத்  
தமிழ்ச் சொற்களாம் ஆதலில் 
இவற்றிற்கு  தடை உத்தரவாம் 
ஆங்க்ளிஷ், தம்லிஷ், தங்க்லீஷ் 
இவை இப்போது ஸ்டைலிஷ் 
ஆம்! தமிழ் அன்னை சாகவில்லை! 
ஆனால் உருக்குலைகிறாள்.  

Wednesday, May 9, 2012

தமிழமுதம்

தமிழமுதம்

பாரதி!
உன் கூற்று பொய்யடா!
இதோ... இங்கே... தமிழ்...
அழகாய், மழலையாய்... சீராய் வளர்கிறது
அமுதாய் இனிக்கிறது
தளிராய் தழைக்கிறது
நிலவாய் ஒளிர்கிறது
இதயத்தை நனைக்கிறது

தமிழ் இனி மெல்லச்சாகும் என
என் தமிழுக்கு சாவு மணி அடித்தவனே!
கல்லறையினின்று எழுந்து வா!
உன் தமிழ் மிளிர்வது கண்டு குளிர்ந்து போ!

 வள்ளுவனே! எமை மன்னியும்!
குழலினிது யாழினிது என்பர்
எங்கள் தமிழ் மொழி அறியாதவர்கள்...