Sunday, May 20, 2012
தொலைத்தது எதை?
தட்டும் கைகளைத் தேடித் தேடி
கவனம் சிதறிய கண்கள்..
பாராட்டும் நாவைத் தேடி
கேட்க மறந்த செவிகள்..
பட்டம் வாங்கக் காத்திருந்து
மரத்துப் போன கால்கள்..
வாங்க மட்டும் வாகாய் வைத்து
கொடுக்க மறந்த கைகள்..
புளித்துப் போன சொல்லைத்தவிர
மற்றவை மறந்தது நாவும்..
இலக்கு என்றே குறியாய் இருந்து
வாழ மறந்த உயிர்கள்...
வேண்டியது வேறில்லை என வாழப் பழகிடு
இதுவே போதும் உயிர்க்கு - திருப்தி பழகிடு
எல்லாப் புகழும் இறைவனுக்கே - பக்தி பழகிடு
இயலாமை என்பது மனதில் தான்-முயற்சி பழகிடு
இல்லை என்பது இங்கில்லை - தேடல் பழகிடு
செல்வச்செருக்கு அர்த்தமற்றது - தானம் பழகிடு
ஆடம்பரம் யாருக்காக - எளிமை பழகிடு
அறியாமை நிரந்திரமல்ல - அறிவுப்பசி பழகிடு
கற்றது கைமண்ணளவு - பணிவு பழகிடு
கல்லாதது உலகளவு - கல்வி பழகிடு
கிளியும் கற்பிக்கக்கூடும் - கேள்வி பழகிடு
மொழியின் அழகு இன்சொல்லில் - இனிமை பழகிடு
சும்மா இருப்பதும் சுகம் - மௌனம் பழகிடு
நான், யான், எனது, எனக்கு - அகந்தை மறந்திடு
வாழும் உயிர்க்கு என்றும் நன்மை பழகிடு
எழுதிய நாள்: ௦௧/௦௩/௨௦௧௦
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment